Monday, January 11, 2016

❤அம்மா❤ என் ❤அம்மா!❤


பெண்ணவள்
பொன்னவள்
மென்னவள்
ஒளியவள்
ஒலியவள்
விழியவள்
வழியவள்
இதயமவள்
உதயமவள்
தெய்வமவள்!

கவிதை எழுத முற்படும்போதெல்லாம் மனதில் எழும் முதல் கவிதையாக!

என்னை தீண்டும் ஒளியெல்லாம் உன் கண்களின் வழியாகவே வரவேண்டும் என்ற வரமே வேண்டும்!

எல்லாம் நீயே என் தாயே!
என்னுள்ளம் நீயே என் தாயே!
உன்னுள்ளம் என் வீடு என் தாயே!
என் சொல்லும் நீயே என் தாயே!
என் செயலும் நீயே என் தாயே!
மொத்தம் நீயே என் தாயே!
என்னுலகத்திற்கு நீயே வானம் தாயே!
என் இரவில் நீயே நிலவு தாயே!
சுற்றும் பூமி நீயே என் தாயே!
என் பகலில் நீயே சூரியன் தாயே!
என்னை மரமாய் வளர்தாய் என் தாயே!

அவளோடு கைகோர்த்து பின்னால் நடந்தேன், என் காலில் துளி கூட காயமில்லாமல், கல்லும் முள்ளும் அவள் கால்களில் ஏற்றுக்கொண்டுவிட்டதால்.....!

நான் சிதறிய வண்ணங்களில் புள்ளி வைத்து கோலம்போட்டு அழகாக்கிவிட்டாள்!

என் நொடி நீ
என் நிமிடம் நீ
என் வாழ்கை நீ
என் வாழ்வே நீ

கொடுத்து வைத்தவன் நான், வயிற்றிலிருந்து ஈரைந்து மாதத்தில் இறக்கிவிட்டு, இறக்கும்வரை என்னை இதயத்தில் சுமக்கிறாயே...!

கவிதையெல்லாம் கழுத்தை நெரிக்கிறது, உன்னையும் எழுதவேண்டுமென்றல்ல, உன்னை மட்டுமே எழுதவேண்டுமென...!

உன் முந்தானையில் மூடி எனை அழைத்துச்சென்றால் முப்பது ஜென்மம் ஆனாலும் அப்படியே வாழவேண்டுமம்மா....!

உனக்கு மட்டும்
உன்னால் மட்டும்
உன்னில் மட்டும்
நான்_மகனாக

சேலை முந்தானையில் பிள்ளையை மூடிக்காப்பாளே அதைவிட பாதுகாப்பு வேறு யாரால் அளிக்க முடியும் இப்பூவுலகில்.

நான் வியக்கும் அதிசயம் என் பாதையை கடவுள் இன்னொரு கடவுளிடம் அமைக்க சொன்னதால் என்னவோ இவ்வளவு அழகாக பாதையை அமைத்துவிட்டாள்...!

கடவுளைக் கண்டால் எனைக்காக்க கடவுளின் கருவுக்குள் எனைக்கடத்திய உனக்கு கோடி நன்றிகள் என்பேன்.

அடுத்த நொடி என்ன வரம் வேண்டுமென்றால் என் தாய் மடியில் மரணம் வேண்டும் என்பேன்..!

உலகத்தில் முதல் உணர்வீ
குழந்தை அழும் சத்தம் கேட்டு அறிவாள்
பசியா
தூக்கமா
எறும்பு கடியா
இன்னும் நீளும் பட்டியல்...

எனக்கு பெண்களை பற்றி தெரியாது,
ஆனால் ஒரு பெண்ணை பற்றி அவளைவிட நன்றாக எனக்கு தெரியும்.

பத்தாண்டுகள் அவள் மண் சுமந்ததற்கு பத்தாயிரம் ஆண்டுகள் பணிவிடை செய்தாலும் கூலி தர முடியா முதலாளியானேன்...!

அன்பில் அவள் விதைத்த விதைகள் நான் நடக்கும் சாலையெல்லாம் எனக்கு நிழலாய் என்னோடு மரமாக வளர்ந்து நடைபோடுகின்றன....!

உழைத்து பழகிவிட்டதால் ஓய்வெடுக்க மறுக்கிறாள்....!

வாழ்க்கையை வாழ அவளெனக்கு கற்று கொடுக்கவில்லை
அவள் வாழ்ந்த வாழ்க்கைதான் எனக்கு வாழ கற்பித்தது...!

உளியில்லாமல் ஒளியில் அவளென்னை சிற்பமாக்கிய சிற்பியவள்....!

எனக்காக நடந்து கடந்த தூரத்தின் கடனை முடிக்கவே பிறவிகள் கோடி வேண்டும்!
அவள் ஆற்றிய மற்ற செயல்களுக்கு எண்ணிலடங்கா பிறவிகளெனக்கு வேண்டும்!

அவள் மண்வெட்டியை இருகையில் பிடித்து
என் ஒரு கையில் எழுதுகோலை பிடிக்கவைத்தாள்....!

மழையாக அன்பை என் மேல் அவள் பொழியவே அவள் வயிற்றில் மழலையாக எனைச் சுமந்து ஈன்றாளோ..!

பத்து மாசம் இருட்ல இருந்ததுக்கு வெளிய வந்தவொடனே வாழ்க்கை முழுதும் வெளிச்சமாக்கிவிட்டாள்

பூக்கள் கொட்டிய சாலையில் நான் சென்றேனா
இல்லை பூக்களெல்லாம் என் சாலையில் கொட்டிவிட்டாளா...

கொடி மல்லி பூத்து தரும் வாசம் அவள் மடி தரும் வாசத்தின் அருகில் கூட நெருங்க முடியாது...!

கண்ணுக்குள் எனைவைத்து காத்தாள்
மண்ணில் விதைத்தும் எனை காக்கிறாள்!

கொடுத்து வைத்தவன் மனிதன் கடவுளோடு வாழ்கிறான்...!

தன்னுள் வளர்த்தாள்
தூக்கி வளர்த்தாள்
தாங்கி வளர்த்தாள்!

பாதையெல்லாம் அவள் பாதங்கள் ஏற்படுத்திய தடங்கள்...
தடங்கல்களே இல்லா பாதையை எனக்கு அமைக்க..!

அரவணைப்பில் தாயை மிஞ்சிய உயிரெதுவுமில்லை இவ்வுலகில்...!

நடை பாதையெல்லாம் அவள் பாதச் சுவடுகள்
நான் செல்லவே உருவாக்கப்பட்டவை...!

முத்தச்சுவடுகள் முகத்தில் மறைந்தாலும்
முத்தச்சத்தங்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன..!

பாதம் பற்றியே நடக்கிறேன் பயத்தில்
எங்கே உன் பாதத்தை விட்டு என் பாதையை மாற்றிவிடுமோ காலம் என்று...!

உழைப்பதிலும் உயர்த்துவதிலும் என்னை பிரமிக்க வைக்கிறாள்...!

அவள் பாதத்தின் தடம் பார்த்தே என் பாதைகளை அமைக்கிறேன்...!

சுவாசிக்க கற்று தந்தவள் நீ
அதனால்தான் இன்னும்
நேசித்து கொண்டிருக்கிறேன!

உடலினை பிரித்து
உயிரினை கலந்து
அன்பால் வளர்த்து
அறிவை புகுத்தி
உலகில் விட்டாள்....!

நானறிந்த என்னை புரிந்த எனக்கு புரியாத புதிர்...!

அடை மழை அவள் அன்பு எப்போதும்..!

என்
வழியும் நீயே
வழித்துணையும் நீயே
வாழ்வில் தூணும் நீயே
என் தாயே..!

நான் பார்த்த முதல் பெண்ணியவாதி...!
அவள் பெண்ணியம் பேசியதே இல்லை
நடத்திக்காட்டினாள்...!

நான் பார்த்த முதல் பெண்ணியவாதி...!
அவள் பெண்ணியம் பேசியதே இல்லை
நடத்திக்காட்டினாள்...!

15வரை
அவள் எண்ணம்போல்
என்னை வண்ணமாக்கினாள்...!
16முதல்
என் வண்ணம்போல்
அவள் எண்ணத்தை மாற்றினாள்..!

நான் அறிந்த ஒரே பெண்ணவள்
நான் அறிய முயலும் ஒரே பெண்ணுமவள்..!

எழுத்தறிவித்தவன் இறைவனானால் - ஆசிரியர்
அதற்கு காரணமானவள் இறைவனின் இறைவன் - அம்மா!

நான் எழுதுவதெல்லாம் கவிதை என்றால்
அதில் அவளே நிறைந்திருப்பாள்..!

அன்னையவள் அடிபாதம் நோக
என் மனம்கூட நோகாவண்ணம் மண் சுமைதாங்கி எனைக்காத்தாள்...!

மின்னும் பொன்னல்ல
பிரதிபலிக்கும் வைரமல்ல
ஜொலிக்கும் நட்சத்திரமல்ல
குளிர்தரும் நிலவல்ல
விலையுயர்ந்த மாணிக்கமல்ல
ஒப்பில்லாதவள்!

தாயை நேசிக்காதவன் கடவுளை படைத்தான்,
கடவுளே தாயாக பிறந்து அவனை நேசித்தாள்...!

அம்மா! என் அம்மா!

இது வெறும் தொடக்கம் மட்டும் தானம்மா..!

- S.மணிகண்டன் சன் ஆப் செண்பகவள்ளி
I never loved a girl
A girl loves me 24x7, guess who, my mom.

No comments:

Post a Comment